கல்வெட்டுக்கள்

பெரிய பிராகாரத்தில் உள்ள திருமதிலில் மூன்று பக்கங்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. உட்பிரகாரத்திலும், வடக்குப் பிரகாரத்தின் உட்சுவரிலும் காணப்படுகின்றன. 1981-இல் அரசாங்கத்தார் அவைகளுக்கு நகல் எடுத்துபோயிரிக்கிறார்கள்.தஞ்சை ஜில்லா கெஜட்டியர் 254, 255-ஆம் பக்கங்களில் இவ்விடத்தில் ஆங்கிலேயருக்கும் தஞ்சைமன்னன் படைகளுக்கும் 1749-இல் ஒரு பெரும்கடும்போர் நிகழ்ந்ததாகவும் அதில் லாரென்ஸ் என்பவர் இக்கோயிலைக் கைப்பற்றுவதென்ற தீர்மானத்தில் இருந்ததாகவும், கோயிலைக் காப்பாற்றும் கருத்துடன் அங்கிருந்த பிராமணர்கள் கோயிலின் உள்ளே இருக்கும் புனிதமான இடங்களை அழித்துவிடாமல் இருக்கும் படி வேண்டிக் கொண்டு திறந்து விட்டதாகவும், குறிப்பிடப் பெற்றிருகின்றன.

இக்கோயிலின், சுற்றுசுவர்களில் சோழமன்னரில் விக்கிரம சோழன், மூன்றாங்குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராச தேவன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும், பாண்டியரில் மாறவர்மன் திரிபுவனஸ் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் காலத்திலும் வெட்டப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், ஸ்ரீகைலாசமுடாயார், திருப்பெருமணமுடைய மகா தேவர், திருப்பெருமணமுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்று உள்ளார்.

அம்மன்கோயிலைக் கட்டியவர்:

இக்கோயிலைக்கட்டி, இதில் திருக்காமக்கோட்டமுடைய நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க்கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டு நெற்குன்றத்தில் இருந்த சந்திரசேகரன் பஞ்சநதிவாணன் ஆவர். இவர் இந்நாச்சி யார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு விருதராச பயங்கர வளநாட்டு விளத்தூர் நாட்டுச் செம்பியன் நெற்குன்றத்தில் ஐந்துவேலி நிலத்தைத் தேவதான இறையிலியாக இட்டிருந்தனர். இந்நிலம் சேரவல்லாமை யினால், இந்நிலத்திற்குத் தலைமாறு (பதிலாக) பற்றுக்கு இடவேண்டும் நிலத்துக்கு உடலாக இராஜாதிராஜ வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டுச் செம்பியன்குடியிலே மூன்றே மூன்று மாக்காணி முந்திரிகை கீழரை நிலத்தையும், செம்பங்குடிச் செற்றூர் என்று கூடின நிலத்திலே முக்காலே மூன்றுமா நிலத்தையும் தேவதான இறையிலியாக விட்டார். இது நிகழ்ந்தது மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் இராச்சிய ஆண்டு முப்பத்திரண்டு, நாள் 327 ஆகும்.

திருஞானசம்பந்தரைப்பற்றிய செய்திகள்:

இவ்வூர்க் கல்வெட்டுக்களில் திருஞானசம்பந்தப் பெருந்தகை யார் ஆளுடைய பிள்ளையார், பரசமயகோளரியார் என்னும் திருப்பெயர்களால் வழங்கப்பெற்றுள்ளனர். இவருடைய நாச்சியாரின் திருப்பெயர் சொக்கியார் என்பதாகும். இச்செய்தி ``இந்நாயனார் கோயில் ஆளுடைய பிள்ளை யாரும் சொக்கியாரும் காவேரிக்குத் தெற்குவடக்கூர்களில் திருவெண் காட்டிலும், திருநனிபள்ளியிலும், திருவாக்கூரிலும் எழுந்தருளிப் பின்பு பெரும்பற்றப் புலியூரிலே எழுந்தருளுகிற இடத்து`` என்னும் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் யாண்டு இரண்டாவது நாள் நாற்பத்தைந்தில் வெட்டப்பட்ட கல்வெட்டால் அறியக்கிடக் கின்றது.

சம்பந்தப் பெருந்தகையார்க்கு இவ்வூரில் திருமணம் நிகழ்ந்ததைப்பற்றி:

"இக்கோயில் உடைய பிள்ளையார் திருக்கல்யாணம் பண்ணிய திருமாளிகையும், திருவீதியும், திருநந்தவனமும், திருமடை விளாகமும் நிலம் ஆறு மாவும்" என்னும் கல்வெட்டுப்பகுதி தெரிவிக்கிறது. இவ்வூரில் பரசமயகோளரிமடம் என்று ஒரு மடம் இருந்தது. இதில் பெருமணமுடையார் கோயில் மாகேசுவரர்களுக்கும், கும்பிடவந்த ஆண்டார்களுக்கும், அமுது செய்தருளுகைக்கு மடப் புறமாக நிலம் விடப்பெற்றிருந்தது. இச்செய்தி விக்கிரம சோழ தேவரின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது.

ஆளுடையபிள்ளையார் திருநந்தவனம்:

ஆளுடையபிள்ளையாரின் திருநாமத்தால், சாத்தமங்கல மான சிவசரணசேகரநல்லூரில், மூன்றுமாக்காணி அரைக்காணி நிலத்தை, திருவாதவூர்ப்பிள்ளை என்பவர் வாங்கித் திருநந்தவனத் திற்கு விட்டிருந்தனர்.

பரசமயகோளரிநல்லூர்:

ஞானசம்பந்தர்க்குரிய பரசமயகோளரி என்னும் பெயரால் ஒரு ஊர் இருந்தது. அதற்குப் பரசமயகோளரிநல்லூர் என்று பெயர். இச்செய்தி ``திரிபுவன வீரதேவர்க்குப் பத்தாவது நாளில் திரிபுவன வீரமங்கலம் என்று பிரிந்த நிலத்தால் நெல்லுக்கும் பல..... இறையிலியாக விட்ட நிலத்தால் நெல்லுக்கும் தலைமாறு கிளைதரம் பார்க்கிற இடத்து பரசமய கோளரிநல்லூர் அவன ஊச்சந்திரவதிக்கும் கிழக்கு`` என்னும் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

ஆயிரத்து எண்ணூற்றுவன் சந்தி:

ஆளுடைய பிள்ளையார் அவரது நாச்சியாராகிய சொக்கியார் இவர்களின் பிரதிமைகளைத் தென்பால் உள்ள ஊர்கள் ஆகிய திருவெண்காட்டிலும, திருநனிபள்ளியிலும், திருவாக்கூரிலும் எழுந்தருளச்செய்து, பின்பு பெரும்பற்றப் புலியூரில் எழுந்தருளப் பண்ணிவந்தார்கள். அங்ஙனம் பெரும்பற்றப் புலியூர்க்கு எழுந்தருளப் பண்ணும்போது, மேற்படியார்களின் பிரதிமைகளைக் கிராமப் பிரதட்சிணமாகக் கொண்டுவந்து கைலாசமுடையார் திருக்கோயிலில் எழுந்தருளச்செய்து, அவர்களின் திருவடிகளை விளக்கி அமுது செய்தருளுவிப்பது வழக்கம் என்பதைத் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் இரண்டாமாண்டு நாற்பத்தைந்தாம் நாள் கல்வெட்டு உணர்த்துகின்றது. அந்நாளில் சிறுகாலைச் சந்தியிலே ஆயிரத்து எண்ணூற்றுவன் சந்தி என்று பிள்ளையாரும் சொக்கியாரும் அமுது செய்தருளுகைக்கும் அவர்கள் அமுது செய்தருளியதை அபூரிகளாய் வந்த பிராமணர்க்குத் திருமுன்பே பிரசாதிக்கக்கடவதன் பொருட்டும் நிலநிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:

இவ்வூர், வடகரை இராஜாதிராஜ வளநாட்டு, வெண்ணெய் ஊர்நாட்டுப் பஞ்சவன் மாதேவியான் குலோத்துங்கசோழச் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கி இருந்தது. இவ்வூர்க்கு அருகில் உள்ளனவாகக் கூறப்பட்ட ஊர்கள்: மாணிக்கவாசகநல்லூர், ஆலாலசுந்தரநல்லூர், சிவசரண நல்லூர் முதலானவைகள் ஆகும்.

பிறசெய்திகள்:

இவ்வூர்க்கோயிலில் உள்ள நடராசப்பெருமான் பண்பதைக்க ஆடு நாயனார் என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.(குறிப்பு:- தருமை ஆதீனம் 25 ஆம் பட்டம் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் கட்டளையிட்டருளிய வண்ணம், இக்கோயில் கல்வெட்டுக்களை எல்லாம் படித்து எழுதிய சுருக்கம் இதுவாகும்.)