புராண வரலாறு

சிவலோகக் காட்சி அளித்தது: முன்னொரு நாள் வசிட்டர், பராசரர், பிருகு, சமதக்னி, விசுவாமித்திரர், அத்திரி, துருவாசர் முதலிய மாபெரும் இருடிகள் யாவரும் ஒன்றுகூடி நீறுபூசி அக்கணிக் கலங்கள் அணிந்து, ஐம்புலனடக்கி, அஞ்செழுத்தோதி, பதினாயிர வருடங்கள் கடும்தவம் புரிந்தார்கள்.தவத்தின் உறுதியினைக் கண்ட இறைவன் கருணையோடு உமாசமேதராய் இடபாரூடராய்க் காட்சி அளித்து "உங்கள் விருப்பம் யாது?கூறும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

காட்சியினைக்கண்ட முனிவர்கள் ஆனந்த பரவசராய் வீழ்ந்து வணங்கி "கடல் விட முண்ட கருணா மூர்த்தியே! புண்ணிய முதலே! சிவலோகத்தை காணவேண்டும் என்னும் ஆவாமிக்குடையோம். அதனைக்காட்டி அருள்பாலித்தல் வேண்டும்" என்று கூற, "அவ்வாறாயின் நீங்கள் நல்லூருக்கு வாருங்கள் அங்கு அதனைக் காட்டுவோம்" என அருள் செய்தான் ஈசன்.உடனே முனிவர்கள் அங்கு நின்றும் புறப்பட்டுப் பலதலங்களையும் வணங்கிக்கொண்டு இங்கு வந்தார்கள். பஞ்சாக்கர தீர்த்தத்தில் நீராடி, சிவலோகங்காணும் பெரும் பேறடைந்தோம் என்ற உணர்வு மீதூர ஆலயத்துட் சென்று இறைவனை வணங்கினார்கள்.அவர்கள் முன்னே சிவலோகம் தோன்றியது.விம்மிதமுற்றார்கள்.அக்காட்சியைக் காணத் தொடங்கினார்கள்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம்.இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.

ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.