அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோகத்தியாகேசர்

சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் ஊருக்கு நடுவில் இரண்டு பிரகாங்களுடன் விளங்குகிறது.உயர்ந்த மதில்களால் சூழப்பெற்றது.முன் புறத்தில் இராஜகோபுரத்துதோடு கூடிய வாயில் அழகு செய்கிறது. சுவாமியும், அம்மனும் கிழக்கு முகமாக எழுந்தருளியிருந்து காட்சியளிக்கின்றார்கள். வெளிப்பிராகாரத்திலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் தோத்திரபூரணி அம்மையாரோடு தனிக்கோயிலில் விளங்குகின்றார். பக்கத்தில் சனீசுவரர் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றார். இம்மண்டபத்திற்குத் தென்பால் காரியாலயம் இருக்கிறது.

வெளித்திருச்சுற்றில் தென்கிழக்கில் மடைப்பள்ளி இருக்கிறது.தென்மேற்கில் மாவடி விநாயகரும்,மேற்கில் முருகக் கடவுளும் எழுந்தருளி இருக்கின்றார்கள்.. வடமேற்கில் அம்மையார் ஆலயமும், வடகிழக்கில் யாகசாலையும் விளங்குகின்றன.

உட்திருச்சுற்றில் தெற்குத் திருமாளிகைப் பத்தியில் அறுபான்மும்மை நாயன்மார்கள் காட்சியளிக்கின்றார்கள். மேலைத் திருமாளிகைப்பத்தியில் சோமாஸ்கந்தர், இலக்குமி, விநாயகர், முருகன், சந்திரசேகரர் முதலாகிய உற்சவமூர்த்திகள் எழுந்தருளி இருக்கின்றனர். வடக்குத் திருமாளிகைப்பத்தியில் பூகைலாசநாதர், நாகநாதர், சுந்தரேசுவரர், விசுவநாதர், மாதுருபூதேஸ்வரர் ஆகியோர் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கின்றனர்.துர்க்கையும் அப்பிராகாரத்திலேயே விளங்குகின்றாள்.

சுவாமிக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் வடபால் பள்ளி அறையும், சபையும் இருக்கின்றன. கீழ்ப்பால் சூரியன், பைரவர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், சந்திரன் ஆகியோர் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கின்றனர்.