தீர்த்தங்கள் (பஞ்சாக்கர தீர்த்தம்)

பஞ்சாக்கர தீர்த்தம், பிருகு தீர்த்தம்,அசுவ தீர்த்தம்,வசிட்ட தீர்த்தம், அத்திரி தீர்த்தம், வியாச தீர்த்தம், மிருகண்டு தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சமதக்னி தீர்த்தம்,முதலிய தீர்த்தங்கள் இருக்கின்றன.பஞ்சாக்கர தீர்த்தம் நீங்கலாக ஏனைய தீர்த்தங்களும் கீழ்த்திசை முதலாக முறையே எண்திக்குகளிலும் அமைந்திருக்கின்றன.ஆங்காங்கு அமைக்கப்பட்ட முனிவர்கள் பெயரால் அவ்வெட்டுத் தீர்த்தங்கட்கும் பெயர்கள் வழங்கப் பெருகின்ற்ன.

பஞ்சாக்கர தீர்த்தம்:இறைவன் பேரருளால் தனது கரத்திலுள்ள சூலப்படையினைப் பூமியில் நாட்டி எடுத்து அப்பள்ளத்தில் முடியிலுள்ள கங்காநீரினைப் பெய்து நிறைத்து ஆன்மாக்கள் மூழ்கி உய்யும் பொருட்டு "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதும், காதலாகி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பதுமான"பஞ்சாக்கரத்தைத்தாபித்தான்.அதனால் இப்பெயர் பெற்றது.

வேதாந்தனென்னும் அந்தணன் காமனுடன் போர்செய்ய ஆற்றாதவனாகி அவன் வயப்பட்டு மடவாரின்பத்தில் ஈடுபட்டும் வழிப்போர்வார்களை வதைத்துப் பொருளை அபகரித்தும் வாழ்ந்து வந்தான்.குல ஒழுக்கத்தை விட்டான்.தாய் தந்தையர்கள் கூறும் சொற்களையும் கேட்டோனில்லை.தன்னைத் துன்புறுத்திய சுற்றத்தார்களுக்குப் பயந்து தன் ஊரை விட்டகன்றான்.ஊர் ஊராய்த்திரிந்தான்.ஆங்காங்கும் அவனொடொத்த குணமுடைய நண்பர்கள் பலர் கூட்டுறவாயினார்கள் அக்கூட்டுறவு அவனது குணத்தைப் பெருகச் செய்தது.

இவ்வாறு இவன் திரித்தலைந்து இறுதியாக நல்வினைப் பயனால் இத்தலத்து வந்தான். அப்போது கோடைக்கால மாதலின் இத்தீர்த்தத்தில் நீராடினான்.எழுந்தான். சிவலோகத் தியாகருருவம் கண்ணுக்குப் புலப்பட்டது.அன்றிரவு இத்தலத்தில் தங்கினான்.மறுநாள் புறப்பட்டுப் பல இடங்களுக்குஞ் சென்றான்.குறித்த வயது முடிந்தவுடன் இயமதூதுவர்களால் நரகலோகத்திற்குக் கொண்டு போகப்பட்டான். அப்போது வழியில் சிவகணங்கள் தோன்றித் தடுத்து,"தூதுவர்களே!இவன் நல்லூரில் பஞ்சாக்கர தீர்த்தத்தில் நீராடியதனால் பாவங்கள் தீர்ந்துவிட்டன" என்று கூறித் தூதுவர்களிடத்திலிருந்து விடுவித்து,விமானத்தின் மீதிருத்தி வானரமகளிர் சூழக் கயிலைக்கு அழைத்துச்சென்று இறைவன் திருமுன் விட்டனர்.உடனே வேதாந்தன் வீழ்ந்து வணங்கி அப்பெருமான் ஆணைப்படி கணாதிபனாகி நித்திய வாழ்வு பெற்றிருந்தான்