திருச்சிற்றம்பலம்

1.கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் காட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

* திருத்தொண்டர்கள் சூழ விளங்குகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவிய சிவபெருமானே! அம்மிக் கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பல உடைய திருமணம் எனக்கும் வேண்டாம்; கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய மணம் மிகுந்த புகழ்ப் பாடல்களின் வாயிலாக என்னுடைய விருப்பமானது மெய்யாகத் தெரியவில்லையோ! தேவரீர் எனது சொல்லாகிய பாடல்கள் காட்டும் பெருமணத்தினை நீர் ஏற்றுக் கொள்ளடவில்லையோ! அருள் புரிவீராக! என்பது குறிப்பு.

2.தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம் பருமண லாக்கொண்டு பாவைநல் நல்லார்கள் வருமணம் கூட்டி மணம்செயு நல்லூர்ப் பெருமணத் தான்பெண் ணோர்பாகம் கொண்டானே.

* ஈசனே! கடலின் ஓதம் காணும் மணலின் முத்துக்கள் சேர்ந்து விரவச் சிறுமியர்கள் மணம் கட்டி விளையாடும் மணம் பெருக விளங்குவது, நல்லூர்ப் பெருமணம். அத்தகைய பெருமை மிக்க பெருமணத்தில் உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்கும் தேவரீர்! அருள் புரிவீராக.

3.அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று இன்புறும் எந்தை இணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

* ஈசன்பால் அன்பு செலுத்தும் சிந்தை உடைய அடியவர்கள், நன்மையே உறுகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவி விளங்கும் எம் தந்தையாகிய ஈசனின் திருவடியை ஏத்துபவர்கள் ஆவர். அத்தகைய சீலத்தை உடையவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் ஈசனுக்குத் தொண்டு புரியும் திருத்தொண்டர்களாக விளங்குவார்கள்.

4.வல்லியம் தோலுடை ஆர்ப்பது போர்ப்பது கொல்லியர் வேழத்து உரிவிரி கோவணம் நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம் புல்கிய வாழ்க்கைஎம் புண்ணிய னார்க்கே.

* சிவபெருமான், புலித்தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; கோவணத்தை அணிந்து இருப்பவர்; அப்பெருமான், ஆசார சீலங்களை உடையவர்களாய் எல்லாக் காலங்களிலும் அன்புறு சிந்தை உடையவர்களாய், ஈசன் திருப்புகழை ஏத்தும் பெருமை உடையவர்களாய் விளங்கும் மெய்யடியார்கள் தொழுது ஏத்தும் நல்லூர்ப் பெருமணத்தில், பொருந்தி விளங்குபவர். இதுவே எம் புண்ணியனாராகிய பரமனின் இயல்பாகும். புண்ணியனார் - ஈசன், போக்கும் வரவும் புணர்வம் இலாப் புண்ணியனே ! என்னும் திருவாசக வாக்கினைக் காண்க.

5.ஏறுகந் தீர்இடு காட் டெரியாடிவெண் ணீறுகந் தீர்திரை யார்விரி தேன்கொன்றை நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம் வேறுகந் தீர்உமை கூறுகந் தீரே.

* ஈசனே ! தேவரீர், இடப வாகனத்தை உகந்து ஏறி வாகனமாகக் கொண்டவர்; சுடுகாட்டில் உகந்து நின்று நெருப்பினைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; திருவெண்ணீற்றை உகந்து திருமேனியில் பூசி விளங்குபவர்; வரிசையாக அழகுடன் விளங்குகின்ற தேன் கமழும் கொன்றை மலரின் நறுமணத்தை உகந்தவர். செல்வம் பெருகும் நல்லூர்ப் பெருமணத்தை உகந்த நீவிர், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்தவரே.

6.சிட்டப்பட் டார்க்குஎளி யான்செங்கண் வேட்டுவப் பட்டங்கட்டும் சென்னி யான்பதி யாவது நாட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்து இட்டப்பட் டால்ஒத்தி ரால்எம்பி ரானிரே.

* ஈசனே ! தேவரீர், ஆசார சீலத்தையுடைய சிவஞானிகளுக்கு எளியவர்; வேட்டுவ கோலத்தை மேற்கொண்டவராய்த் தலையில் பட்டம் கட்டிக் கொண்டு திகழ்பவர். உமது பதியாவது நடனம் புரிவதற்கு உரிய கொட்டு வாத்தியம் ஓயாது விளங்கும் நல்லூர்ப் பெருமணம். நீவிர், விரும்பினால் பிற இடங்களிலும் தோன்றி விளங்குபவர். நீரே எமது பெருமான்.

7.மேகத்த கண்டன்எண் தோளன் வெண்ணீற்றுமை பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

* ஈசன், மேகம் போன்ற அருள் வழங்கும் கரிய கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; புலித் தோலை உடையாகக் கொண்டவர்; நாகத்தை இறுகக் கட்டி உள்ளவர்.

8.தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.

* இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!

9.ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம் போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே

* குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்

10.ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின் நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய வேதன தாள்தொழ வீடெளி தாமே.

* இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.

11.நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவ மவல மிலரே.

* நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.