தலப்பெயர்கள்

சிவலோகம், நல்லூர், திருமணவை, முத்திபுரம், ஆச்சாள்புரம் எனப் பல பெயர்கள் இத்தலத்துக்கு வழங்கப்படுகின்றன.

சிவலோகம்:

வசிட்டர் முதலிய முனிவர்கட்குஸ் சிவலோகம் காட்டியருளியதால் இப்பெயர் வந்தது.

நல்லூர்:

ஆதியில் பிரமதேவன் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு சீகாழிக்குப் போகுங்கால் இத்தலத்தில் உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலியவற்றின் சிறப்புக்களையும் செழிப்பான பலவளங்களையும் கண்டு 'இஃது ஓர் நல்லூர் ஆகும்' என்றமையால் இப்பெயர் வந்தது.

மணவை-முத்திபுரம்:

சைவ சமய முதற்குரவராகிய திருஞானசம்பந்தப்பெருமான், தமது திருமணத்தில் தம் மனைவியாரோடும் அடியார்களோடும் பரிசனங்கள் புடைசூழ எழுந்தருளி, இறைவனருளால் தோன்றிய சோதியிற் கலந்து முத்தி எய்தினமையின் மணவை, முத்திபுரம் என்னும் பெயர்களும் வழங்கலாயின.

ஆச்சாள்புரம்:

ஆயாள்புரம், ஆச்சாள்புரம் என மருவியது. திருஞானசம்பந்த சுவாமிகளது திருமணக்காலத்தில் அம்மையார் பேதமின்றி யாவர்க்கும் திருவெண்ணீறு அளித்துஸ் சோதியுட் புகுவித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. (ஆயாள்=அம்மையார்,புரம்=ஊர்.)